திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை மேற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, 'முன்னணி இயக்குநர்கள் பார்வையில் தமிழ்நாட்டின் இயக்கம் டாக்டர் கலைஞர்' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், வி.சி. குகநாதன், தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "ஒரு சினிமா மாணவனாக கலைஞருடைய படங்கள், தமிழ் சினிமாவுக்குள்ளும் தமிழ் சமூகத்துக்குள்ளும் என்ன தாக்கம் ஏற்படுத்தியது என்பதை என்னுடைய புரிதலில் இருந்து பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். எல்லாரும் போல பராசக்தி படத்திலிருந்து தான் தொடங்க போறேன். அதற்கு முன்பாக எடிட்டர் விஜயன் சார் சொன்ன ரெண்டு மூணு விஷயங்களை சொல்கிறேன். நான் உதவி இயக்குநராக இருந்தபோது விஜயன் சார் கலைஞருடைய படங்களுக்கு எடிட்டிங் செய்து கொண்டு இருந்தார். ஒரு ஷாட் எவ்வளவு தூரம் இருக்கணும், அப்படி இருந்தால் எவ்வளவு நேரம் பார்க்க முடியும், எந்த அளவை தாண்டினால் பார்வையாளர்கள் பார்க்க முடியாது என்பது இயக்குநருக்கும் எடிட்டருக்கும் தெரிஞ்ச விஷயங்கள். ஒரு வசனம் இங்க இருந்தா சரியா இருக்கும், இல்லைன்னா சரியா இருக்கும் என அனுமானிக்கிறது. அந்த கணிப்பு இருவருக்குமே அத்தியாவசியம். ஒளிப்பதிவாளர்களுக்கே அது கை வராத ஒன்று.
இந்த விஷயம் எப்போதுமே டைலாக் ரைட்டர்ஸுக்கு இருக்காது. அவர்கள் எழுதிய வசனம் எல்லாமே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் கலைஞர் ஐயா, இந்த வசனத்தை தூக்குங்கள், அந்த வசனம் வேண்டாம் என சொல்லுவார் போல. அப்படி ஒரு நாள் எடிட் செய்து கொண்டிருந்தபோது அவசரமாக அவரை வேறொரு வேலைக்காக கூட்டிட்டு போய்ட்டாங்க. அவர் 1 மணி நேரத்தில் வந்துடறேன் என சொல்லிவிட்டு கிளம்பி கோட்டைக்கு போய்விட்டார். வெயிட் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லன்ச் டைம் ஆகிடுச்சு. ஆனால் வேலை நடந்துக்கிட்டே இருக்கு. பிறகு கலைஞர் வந்தார். வீட்டுக்கு கூட போகாம நேரா அங்க வந்திட்டு, விஜயன் சாரை கூப்பிட்டு, 'சாரி விஜயன்... உன்ன வெயிட் பண்ண வச்சிட்டேன். தப்பா எடுத்துக்காத ' என்றார். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த இடத்தில ஒரு முதலமைச்சராக இல்லாமல், ஒரு எழுத்தாளராக அவருடைய வேலையை செய்தார். அப்புறம் மன்னிப்பு கேட்டு பட வேலைகளை பார்த்தார்.
பார்த்துக்கொண்டே வந்தவர் ஒரு இடத்துல நிறுத்தி, இந்த இடத்தில் அதிகமா இருக்கே, குறைக்க சொன்னனே. அதை பண்ணவில்லையா என கேட்டாராம். இந்த மெம்மரி, அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் படத்தின் மீது உள்ள ஆர்வம். தங்கர் பச்சான் சார் சொன்ன மாதிரி, விஜயன் சார் கிட்ட நிறைய நேரங்கள் செலவழித்தாராம். அவருடைய எழுத்து அவருடைய படம் என்னவா வந்திருக்கும் என்பது அவ்வளவு சிறப்பா இருக்கும் என நினைக்கிறேன். இதேபோல், அவர் வசனம் எழுதிய படம், எடிட்டிங் எல்லாம் முடிச்சு திரையரங்கில் ஷோ பாக்குறாங்க. கலைஞருக்கு பின்னால் ஒருத்தர் படம் பார்த்துக்கிட்டு இருக்கார். படம் முடிஞ்சு எல்லாம் வெளியே போய்ட்டாங்க. 3 பேர் மட்டும் உள்ள இருக்காங்க. கலைஞர் ஐயா, படம் எப்படி இருக்கு என கேட்க, பின்னாடி இருந்தவர் 'நல்லாருக்கு அண்ணே' என சொல்ல, உடனே கலைஞர் 'அப்போ நீ தூங்கிட்ட, இது நல்லாவா இருக்கு' என்றார். அவர் சார்ந்த படம் என்பதற்காக நல்லா இல்லாததை நல்லாயிருக்கு என்று தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளாத ஒரு மனிதர். அது ஒரு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கிறேன்.
அரசியல் என்று பார்க்கையில், ஒரு வீட்டில் உள்ள அரசியலையே நம்மால் சமாளிக்க முடியாது. ஆனால் அவரை சுற்றி ஆயிரம் தேவைகள், எதிர்பார்ப்புகள் என ஏகப்பட்டது இருக்கும். இதற்கு நடுவில் அரசியலை நகர்த்திக் கொண்டு போகிறது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு இந்த ஒரு தன்மை அவருக்கு இருந்தது தான் காரணம் என நினைக்கிறேன்" என்றார்.