‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அறியப்பட்ட வசந்தபாலன், தற்போது எடுத்து முடித்திருக்கும் படம் ‘ஜெயில்’. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகளும் முடிவடைந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தலால் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் ‘ஜெயில்’ படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், தன்னுடைய அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார் வசந்தபாலன். இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ளதாகவும், அர்ஜுன் தாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், சில தினங்களாக 'தி லிஃப்ட் பாய்' படத்தின் தமிழ் ரீமேக் பணிகளைத்தான் இயக்குனர் வசந்தபாலன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு வசந்தபாலன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் இயக்குனர் வசந்தபாலன் கூறுகையில், "பல முக்கியமான இணையதளங்களில் நான் இந்தியில் வெளியான ‘தி லிஃப்ட் பாய்’ திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறான தகவல்" என்று தெரிவித்துள்ளார்.