விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் 2024-இன் ‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழா ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் வெளியான ட்ரைலரில் குறிப்பிட்ட நிலையில் படம் குறித்து பேசிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன், “நான் கமிட்டாகும் போது இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50வது படம் எனத் தெரியாது. ஷூட் போறதுக்கு முன்புதான் தெரியும். ஷூட் போய்க்கிட்டு இருந்த சமயத்திலும் வில்லன் ரோலுக்கு யாரும் கமிட்டாகவில்லை. ஷூட் இடைவெளியின் போதுக் கூட நிறைய பேரிடம் கதை சொல்லிட்டு வந்தேன். கடைசியில் அனுராஜ் கஷ்யப் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி. மகாராஜா கதாபாத்திரம், லட்சுமி யார் என்று தேடும் போதுதான், தான் யார் என்று புரியவருகிறது. படத்தின் கதையோட்டத்தில் ஒவ்வொரும் தங்களைப் பொருத்திக் கொண்டால் அனைவரும் மகாராஜாதான். ஜூன் 14 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.