நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். பின்பு தனது கட்சியை, பாஜகவுடன் திடீரென்று இணைத்தார். அவரும் பா.ஜ.க.வில் இணைந்தார். சரத்குமாரின் இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு விளக்கமளித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “என்னை பொறுத்தவரை யாரையும் தரக்குறைவாக பேசியது இல்லை. மனைவியிடம் கருத்து கேட்டதினால் என்னை விமர்சனம் செய்கின்றனர். மனைவியிடம் கருத்து கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்?. இது மாதிரியான கருத்துகளுக்கு நான் செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
இதனிடையே, பா.ஜ.கவில் தனது கட்சியை சரத்குமார் இணைத்தது பின்னால் சரத்குமாரின் மகள் வரலட்சுமி இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு, என்.ஐ.ஏ சோதனையில் கேரளத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஆதிலிங்கம் என்ற நபர் வரலட்சுமியிடம் குறிப்பிட்ட காலம் உதவியாளராக பணியாற்றியிருந்தார். இது தொடர்பாக வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த வரலட்சுமி, சம்மன் வரவில்லை என்றும், ஆதிலிங்கம் பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக வரலட்சுமி மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு இருப்பதாகவும் இதில் தப்பிப்பதற்காக கட்சியை பா.ஜ.க-வில் இணைத்ததாகவும் செய்திகள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் அந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பிரபலங்களிடம் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது. உண்மையிலேயே கவனிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகளும் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
It’s so sad that our talented media has no news than to start circulating old #fakenews. Our dear journalists especially the self proclaimed news sites and your articles, why don’t you actually start doing some real journalism! Stop finding flaws with your celebtrities, we are…— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) March 14, 2024