தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை நோய்க்கான மருத்துவத்தில் இருந்த நிலையில், தமது 99வது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"கி.ரா
வட்டார மொழி இலக்கியத்தின்
ஆதி ஊற்று.
அவரது மறைவால்
இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது.
அவர் மறைவுக்கு
அரசு மரியாதை அறிவித்திருக்கும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.
அரசு அவருக்கு எதிர்காலத்தில்
நினைவுமண்டபம் எழுப்பும்
என்று நம்புகிறோம்.
கி.ரா தமிழில் வாழ்வார்" என பதிவிட்டுள்ளார்.