சென்னையில் இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமை கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு ராயல்டியை பெற்றுத்தரும் ஐபிஆர்எஸ் (IPRS) நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் விவேகா, மதன் கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய வைரமுத்து, "கலைஞர்கள் பாவம், கலைஞர்கள் சட்டம் அறியாதவர்கள், கலைஞர்கள் உரிமை தெரியாதவர்கள், பூமியில் நின்றுகொண்டு நட்சத்திரங்களில் தேன்குடிக்க ஆசைப்படுபவர்கள். தாய் பாலுக்கும், நிலா பாலுக்கும் வேறுபாடு தெரியாத பிரம்மையாளர்கள். மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருமுறை என்னிடம் சொன்னார். எனக்கு ஸ்வரங்கள் மொத்தம் ஏழு சரிகமபதநி அதற்கு பிறகு எனக்கு நம்பர் தெரியாது. அந்த ஸ்வரங்கள் வரைக்கும் தான் எனக்கு தெரியும். இப்பொழுது பல விஷயங்களை சொல்கின்றனர். இந்த அமைப்பு (IPRS) வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது . மேலை நாடுகளில் 100 பாட்டு எழுதினால் அவர் சுவாசிப்பதை தவிர வேறு ஏந்த வேலையும் செய்ய தேவையில்லை. பசிபிக் கடல் ஓரத்தில் அவரால் தீவே வாங்கி விட முடியும். பணம் தீர்ந்த பிறகு மீண்டும் பாட்டெழுதி சம்பாதித்து தீவை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் 7,500 பாடல் எழுதிவிட்டேன் . இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். இதுதான் எங்களின் நிலைமை. ஒரு கலைஞர் திரைத்துறையில் 25 ஆண்டுகள் இருக்க முடியும். அதில் 15 ஆண்டுகள் புகழுடன் இருப்பார். 10 ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்தவரை அடுத்த பத்தாண்டு கழித்து அவரின் பெயரை கூட உச்சரிக்காத சமூகத்திற்கு நாம் வந்திருக்கிறோம்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.