பல ஆண்டுகளுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுத்தில் வெளியாகும் கவிதை நூல் ‘மகா கவிதை’. வைரமுத்துவின் 39வது படைப்பாக உருவாகியுள்ள இந்த புத்தகத்தில் நிலம் - நீர் - தீ - வளி - வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “முதலமைச்சரை முகாம் அலுவலகத்தில் சந்தித்து மகா கவிதை நூலையும் அதன் வெளியீட்டு விழா அழைப்பிதழையும் வழங்கினேன். முப்பது நிமிடங்கள் உள்ளம் பரிமாறி உரையாடினோம். நம்பிக்கையூட்டும் புன்னகை, நல்லவை சுடரும் கண்கள், மிகையில்லாத சொற்கள், நகைததும்பும் வாக்கியம், சின்னதொரு தளர்ச்சியிலும் தன்னைப் பின்னிறுத்தி மக்கள் பணிகளை முன்னிறுத்தும் மாண்பு. உரையாடல் போலவே சுவையான காஃபி. ஓடிவந்து நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறார் முதல்வர். மகா கவிதைக்கு மகுடம் சூட்டுங்கள் என்றேன். புன்னகைத்தார். அது அவர் எழுதும் கவிதை” எனக் குறிப்பிட்டுள்ளார்.