
பாலிவுட்டில் ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, ‘ராம் கி ஜென்மபூமி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் சனோஜ் மிஸ்ரா. இவர் உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவின் மூலம் பிரபலமடைந்த பாசி மணிகள் விற்கும் மோனலிசா போஸ்லே(17) என்ற பெண்ணிற்கு பாலிவுட்டில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்து பலரின் கவனம் பெற்றார்.
இந்த நிலையில் பாலியல் புகார் வழக்கில் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரில் “2020ஆம் ஆண்டு சனோஜ் மிஸ்ராவை சமூக வலைதளங்களான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்தேன். பின்பு அவருடன் நன்கு பழகி வந்தேன். ஒரு கட்டத்தில் அவர் என்னை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் மறுத்த போது தன்னை சந்திக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறினார். அதனால் பயந்து போய் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்து சென்று போதைப் பொருள் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார். அதோடு அதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தன்னுடன் உறவில் இருக்கும் படி பிளாக்மெயில் செய்தார்.
பின்பு திருமணம் செய்து கொள்வதாகவும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் மும்பையில் லிவ்-வின் ரிலேஷன் ஷிப்பில் இருக்கச் சொன்னார். அதன் படி அவருடன் இருந்த போது பல முறை என்னை பாலியல் துன்புறுத்தல் செய்து பயங்கரமாகத் தாக்கவும் செய்தார். மேலும் மூன்று முறை கரு கலைப்பும் செய்ய கட்டாயப்படுத்தினார். கடந்த பிப்ரவரி மாதம் என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்ற அவர் என்னை தன்னந்தனியே விட்டுவிட்டு சென்றார். மேலும் தன் மீது புகார் கொடுத்தால் பாலியலில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லீக் செய்து விடுவதாக மிரட்டினார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சனோஜ் மிஸ்ரா மீது பாலியல் துன்புறுத்தல், கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட சில பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சனோஜ் மிஸ்ரா அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.