தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்(71) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த 11 ஆம் தேதி வீடுதிரும்பிய அவர் நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே அவரது மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகயில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, “எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து, “எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார். திரையில் நல்லவர்; அரசியலில் வல்லவர், சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர். கலைவாழ்வு, பொதுவாழ்வு, கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர். கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல்செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.