Skip to main content

"சாதியைக்கூட மன்னிக்கலாம்..." - நாங்குநேரி சம்பவம் குறித்து வைரமுத்து

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

vairamuthu about nanguneri issue

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடி விட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்குப் போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, பள்ளியில் சில மாணவர்கள் தன்னைத் தாக்குவதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2  மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், மோகன்.ஜி, கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமி, யுகபாரதி, அமீர் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். 

 

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, அவரது ட்விட்டர் பக்கத்தில், "நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு. சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது. சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே! முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்