மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக படக்குழுவினர் உட்பட பல திரைப்பிரபலங்கள் வருகை தந்த நிலையில், படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது வடிவேலு பேசியதாவது, “நான் எங்கேயும் செல்லவில்லை. எப்போதும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்போனில் நான் இருந்துகொண்டே இருக்கிறேன். மீம் கிரியேட்டர்ஸ் மூலமாக நான் எப்போதும் இருக்கிறேன். உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறந்த நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குநர் மாரி செல்வராஜ் நல்ல ஒரு கதைக்களத்தை அமைத்திருக்கிறார். அனைவருடைய வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகக்கூடிய கதை இது. அருமையான கதையை உதயநிதி சார் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் நான் இந்தப் படத்தில் பாடியிருக்கிறேன். அவர்தான் என்னைப் பாட வைத்தார். என்னுடைய தாய் என்னைப் பாடத் தூண்டி ஊக்கம் கொடுத்தார். இறந்துபோன என்னுடைய தாயை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர் என்னோடு எப்போதும் இருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடையும். தேவர்மகனுக்குப் பிறகு எனக்கு பெரிய அரசியல் படம் இது. இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் குறித்த பல்வேறு செய்திகள் வெளியே வந்துள்ளன. இது ஒரு சிறந்த குணச்சித்திர கேரக்டர். வில்லன் மாதிரியும் இருக்கும். சுயமரியாதை கலந்த கேரக்டர் இது. உதயநிதி இந்தப் படத்தை கடைசிப்படம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதுவரை ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப் போகிறார். அரசியலில் அவருக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதற்காக இதை நிறுத்துகிறார். மக்கள் பணியைத் தொடர அவர் விரும்புகிறார்” என்றார்.