
2006ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி இப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரிக்க திட்டமிட்டார். பின்னர் இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ரூ.1.50 கோடி சம்பள முன்பணம் கொடுத்து மீண்டும் ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் சிம்பு தேவன். மேலும் இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிற்காக சென்னையில் 6 கோடி ரூபாய் செலவில் அரங்கு அமைத்து இருந்தனர். இந்நிலையில் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துவிட்டதனால் படம் நின்று போனது. அதிருப்தி அடைந்த ஷங்கர் வடிவேலு மீது திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும், கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். பின்னர் இதனை பரிசீலித்த நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. இந்நிலையில் தற்போது இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர்கள் சங்கம் இறுதி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி படப்பிடிப்பில் வடிவேலு கலந்துகொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அரங்கு அமைக்க படக்குழுவினர் செலவிட்ட ரூ.6 கோடியையும், அட்வான்ஸ் தொகையான ரூ.1.50 கோடி சேர்த்து வட்டியுடன் ரூ.9 கோடியை அவர் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கெடு விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கெடுவிற்கு பதில் அளித்த வடிவேலு, 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.