தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகியுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று (17.02.2023) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நாகவம்சி மற்றும் சாய் தயாரித்துள்ளனர். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டியில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் வெங்கி அட்லூரியிடம் நெறியாளர், 'நீங்கள் ஒன்றிய கல்வி அமைச்சரானால் கல்வி அமைப்பு குறித்து என்ன முடிவெடுப்பீர்கள்...' எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த வெங்கி அட்லூரி, "என்னுடைய பதில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தலாம். இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன். அதாவது இட ஒதுக்கீடு முறையை பொருளாதார ரீதியில் கொடுப்பேன். சாதி ரீதியில் அல்ல" என்றார்.
இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாற பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தின் கதை மாணவர்களின் கல்வி குறித்து உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.