சமீபகாலமாக ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக தற்போது கர்நாடகாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம், விஜய்ப்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் இளைஞர் பரசுராமன். இவர் ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசுப் பணிகள் தொடர்பான தேர்வுக்கும் படித்து வருகிறாராம்.
இதனிடையே பரசுராமனுக்கு ஃபேஸ்புக்கின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படம் கொண்ட ஒரு ஐடியிலிருந்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்திருக்கிறது. ஆனால் முகப்பு பக்கத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்பது பரசுராமனுக்கு தெரியவில்லை. வேறொரு பெண் தன்னுடன் நட்பாக வேண்டும் என எண்ணுவதாக நினைத்து அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். பின்பு இருவரும் நன்கு பழகி வந்துள்ளனர். பிறகு அந்த ஐடியிலிருந்து பரசுராமனின் வாட்ஸ் அப் நம்பரை கேட்க, அவரும் கொடுத்துள்ளார். வாட்ஸ் அப்பில் சாட் செய்த பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர்.
தான் ஒரு கல்லூரி படிக்கும் இளம்பெண் என்றும், தன் படிப்பிற்காக உதவி செய்யுங்கள் என்றும் அந்தக் காதலி கேட்க, தன் காதலி கேட்பதால் பணம் கொடுத்துள்ளார் பரசுராமன். இதனைத் தொடர்ந்து அடிக்கடி அந்தக் காதலி சில காரணங்களால் பணம் கேட்க மனதுக்கு விருப்பமான பெண்ணுக்குத்தானே கொடுக்கிறோம் என பரசுராமனும் தந்துள்ளார். ஒருநாள் பரசுராமனிடம் அந்தக் காதலி, ஆசை வார்த்தை பேசி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ அனுப்ப சொல்லிக் கேட்டுள்ளார். உடனே பரசுராமனும் அனுப்ப அந்த வீடியோவை அந்தக் காதலி ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அந்த வீடியோவை வைத்து அந்தக் காதலி பரசுராமனை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் பரசுராமனுக்கு தான் தவறு செய்ததை உணரத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து அந்தக் காதலி பிளாக் மெயில் செய்ய, சுதாரித்துக்கொண்ட பரசுராமன், கடந்த மாதம் 15-ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அந்தக் காதலி ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பதும் அவர் ஆன்லைன் மூலம் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் மஞ்சுளா ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவர் என்றும் இந்த பண மோசடிக்கு மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பண மோசடியில், சுமார் 40 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ள மஞ்சுளா அதை வைத்து 100 கிராம் தங்கம், ஹூண்டாய் கார், பைக் என பொருள்களை வாங்கியுள்ளார். அதோடு வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார். மஞ்சுளாவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மஞ்சுளாவின் கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.