Skip to main content

சர்ச்சையைக் கிளப்பிய 'உருட்டு உருட்டு' பாடல்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

Uruttu Uruttu song controversy

 

கே.ஆர். சினிமாஸ் தயாரிப்பில் ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘பப்ளிக்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி, ஜீவா, ராமமூர்த்தி, காயிதே மில்லத் போன்ற பல்வேறு தலைவர்களின் படங்களை வைத்து வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். 

 

அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக் தொடக்கத்தில் “இந்த படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்துமே நிஜம். இங்கு நடந்ததைத்தான் சொல்லியிருக்கிறோம். யார் மனமாவது புண்பட்டால் நாங்கள் பொறுப்பு கிடையாது” எனத் தொடங்கி ‘மாடே மாடே’ என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை வைத்து அரசியல் கட்சிகள் செய்யும் போராட்டங்களை நக்கல் செய்யும் காட்சி இடம் பெற்று இருந்தது. அதற்கு அடுத்து வெளியான ஸ்னீக்பீக் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித் தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகி அரசியல் கட்சிகளில் சீட் கொடுக்கும் முறையை கிண்டல் செய்து இருந்தது.

 

சர்ச்சைக்குரிய போஸ்டர்கள், ஸ்னீக் பீக் மூலம் அரசியலை விமர்சித்து வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேசப் போகிறது என்கிற விவாதத்திற்கு இடையில் தற்போது பப்ளிக் படத்தின் முதல் பாடலான 'உருட்டு உருட்டு' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ளது. இதில் உள்ள சில வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை நேரடியாக தாக்குவது போல் உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். இப்பாடல் குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள பலரும் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்து இருப்பதால் படத்தில் இடம் பெறுவது சந்தேகம் தான் என்றும் விரைவில் இந்த பாடல் தடை செய்யப்படலாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்