விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய அவர், "எல்லா தலைவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றோர்களைப் படிங்க. நல்ல நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கங்க. ஓட்டுக்கு காசு வாங்கக் கூடாது. இதை பெற்றோரிடம் நீங்க சொல்லுங்கள்" எனப் பேசியிருந்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இதனை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் விஜய் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையைத் தருகிறது. மாணவ - மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதுவும் விஜய் பேசும்போது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களைப் படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் உதயநிதி, செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில் அவரிடம், ‘ஓட்டுக்கு காசு வாங்கக் கூடாது’ என விஜய் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நல்ல விஷயம் தான். நான் தொகுதியில் இருப்பதால் அவர் பேச்சை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்" என்றார். மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு" எனப் பதிலளித்தார்.