
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள் படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. டீசரில் இலங்கை தமிழில் அனைவரும் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ட்ரைலரில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பித்து வரும் சசிகுமார் குடும்பத்தினர், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் தங்களது அடையாளத்தை கேரளாவை சேர்ந்தவர்கள் என மாற்றி வாழ்ந்து வருகின்றனர். அப்போது அவர்கள் சந்திக்கும் சம்பவங்களை வைத்து கதை நகர்கிறது. இறுதியில் போலீசிடம் சிக்கினார்களா இல்லையா, எதற்காக அவர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர் என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. ட்ரைலரின் கடைசியில் ஒரு போலீஸ்காரர் சசிகுமாரின் இளையமகனை பார்த்து பெயர் என்ன கேட்க. அதற்கு விஜய்யின் தெறி பட கதையை அந்த சிறுவன் சொல்லும் காட்சி ஹைலட்டாக அமைந்துள்ளது.