
ஜம்மு - காஷ்மீரின் பஹல்கம் எனும் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (22-04-25) பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பஹல்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களைக் கண்டறிந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வால் திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன நிலையில் தனது மனைவியுடன் சென்றிருக்கிறார். அவரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலுக்கு அருகில் அவரது மனைவி சோகமாக உட்காந்திருக்கும் புகைப்படம் பார்ப்பவர்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இரங்கல்களையும் தாக்குதலுக்கு எதிராக கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் அந்த பெண் அழுகும் புகைப்படத்தை பகிர்ந்து, “அப்பாவிகளின் உயிர்பலிக்கு காரணமான தீவிரவாத கோழைகளை வேரறுப்போம்” என தனது தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இதே புகைப்படத்தை பகிர்ந்து நடிகை மஞ்சு வாரியர் தனது வருத்தத்தை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அப்பாவிகளின் உயிர்பலிக்கு காரணமான தீவிரவாத கோழைகளை வேரறுப்போம்..!#pehlgamattack #PahalgamTerroristAttack pic.twitter.com/lITlVgXDiF— G.V.Prakash Kumar (@gvprakash) April 23, 2025