Skip to main content

“அயோத்தி படத்தால் 500 குடும்பங்கள் பயனடைஞ்சிருக்காங்க” - சசிகுமார்

Published on 24/04/2025 | Edited on 24/04/2025
sasikumar said 500 families have benefited from ayothi movie

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படம் இலங்கையில் வாழும் ஒரு குடும்பத்தினர் சில காரணங்களால் தமிழ்நாட்டிற்குத் தப்பித்து வர அவர்களின் நிலை என்ன என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப தலைவனாக சசிகுமார் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையொட்டி நடந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் தொடர்பாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது சசிகுமாரிடம் தொடர்ந்து வயதான தோற்றத்தில் நடிப்பதாக கேள்வி கேட்கப்பட்டது.   

அதற்கு பதிலளித்த அவர், “வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் அப்போதே கடல் மீன்கள், நாயகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்” என்றார். தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த படத்தில் இவருக்கு மகனாக நடித்த 26வயதுடைய மிதுனை காண்பித்து, “இவ்வளவு பெரிய மகனுக்கு எந்த கதாநாயகனாவது அப்பாவா நடிப்பாங்களா? நானும் நடிக்கமாட்டேன்னு சொல்லியிருந்தால் இப்படி ஒரு படத்தை மிஸ் செய்றன்னுதான அர்த்தம். இதே போலத் தான் அயோத்தி படமும். அதில் சண்டை கிடையாது, சும்மா வண்டி ஓட்டனும், கடைசியில் பேசும் வசனத்துக்காகத் தான் நான்... அதில் யாராவது நடிப்பாங்களா. ஆனால் அந்த படம் எனக்கே தெரியாமல் ஒரு நல்லது பண்ணியிருக்கு. 

அயோத்தி பார்த்துவிட்டு, அரசாங்கம் இறந்தவங்களை கொண்டு போகும் முறையைச் சுலபமா மாத்தியிருக்கு. அதோடு அவங்களுக்கு ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோ மாணியம் கொடுத்திருக்கு. இதை ஒரு அரசு அதிகாரி எங்கிட்ட சொன்னாங்க. மேலும் 500 குடும்பங்கள் இதுனால பயனடைந்ததா சொன்னாங்க. இது எனக்கு இரண்டு வருஷமா தெரியவே இல்லை. அதை கேட்ட போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இந்த மாதிரி படங்கள்ல நடிப்பதுக்கு 70 வயசு தாத்தா வேஷம் கூட போட தயார். வேஷம் போடுவதற்கு தானே நம்ம வந்திருக்கோம். அதுதான நம்ம வேலை” என்றார். 

சார்ந்த செய்திகள்