Skip to main content

“இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு” - த.வெ.க தலைவர் விஜய் அறிவுறுத்தல்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
tvk leader vijay instructed his members to joined two crore new members

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். அந்த அறிக்கையில் வருகின்ற 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த அவர், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து கட்சியின் முதல் கூட்டமாக, செயற்குழு கூட்டம் கடந்த 7ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர். 

இதனை தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுள்ளனர். “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்” உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அக்கட்சியினர் ஏற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய்யின் ஆலோசனையின் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவரால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர். ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவர் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். நமது கழகத் தலைவரரின் உத்தரவின் பேரில், மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்