கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டதிலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் இன்று( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் தொடர்ச்சியாக மீட்பு பணிக்குழு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது, தற்போது வரை இந்த இரு நிலச்சரிவுகளில் 70 பேர் உயிரிழந்ததாகவும் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் இரு நிலச்சரிவுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பேரிடர் சம்பவத்திற்குத் தொடர்ச்சியாகப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலையும் மேலும் மீட்பு பணியை விரைந்து செயல்படுத்தக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் இச்சம்பவத்திற்குத் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “கேரளாவிலுள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பற்றிதான் என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. அவர்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்