தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் கூட்டமாக, கடந்த 7 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். மேலும் த.வெ.க தலைவர் விஜய்யின் ஆலோசனையின் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பிரத்தியேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் உறுப்பினர் விண்ணப்பம் படிவம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் விஜய் கட்சியின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து நிறைய தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் விஜய் மக்களை சந்திப்பார் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் @actorvijay அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq…— N Anand (@BussyAnand) February 23, 2024