
த்ரிஷா தற்போது கமலின் தக் லைஃப், சிரஞ்சீவியின் விஷ்வம்பரா, சூர்யாவின் 45வது படம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தக் லைஃப் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது. விஷ்வம்பரா போஸ்ட் புரொடைக்ஷன் பணிகளில் இருக்கிறது. ‘சூர்யா 45’ இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. இதனிடையே அஜித்துடன் அவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் நேற்று(10.04.2025) வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் நேற்றே சட்ட விரோதமாக இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா தொடர்ந்து தனது ஸ்டோரியில் பல்வேறு பொன்மொழிகள், நண்பர்களுடன் பார்டி செய்யும் புகைபப்டங்கள், தனது படங்களின் அப்டேட்ஸ் குறித்தான பதிவுகளை பகிர்ந்து வருவார். அந்த வகையில் த்ரிஷா தற்போது தனது ஸ்டோரியில் சமூக வலைதளங்களில் வரும் சில கருத்துகள் குறித்து ஆதங்கப்பட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஷப்பா... டாக்சிக் நபர்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள் அல்லது நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக ஊடகங்களில் உட்கார்ந்துக் கொண்டு மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்ற விஷயங்களை பதிவிடுவதால் உண்மையிலே உங்கள் நாள் மகிழ்ச்சியாக இருக்கிறதா? பெயர் தெரியாத கோழைகளே கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.