20 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'டாப் 10' விமர்சனம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் திரு. சுரேஷ் அவர்கள் இன்றைக்கு இருக்கும் விமர்சகர்கள் குறித்து நக்கீரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசியபோது....
''விமர்சனம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும். அது கெட்ட படமாகவே இருந்தாலும் அதில் உள்ள நல்லவற்றையும் எடுத்துரைக்க வேண்டும். அது தான் சிறந்த விமர்சனம். டிஜிட்டல் மீடியா விமர்சகர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டுள்ளேன். படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் என் விமர்சனங்களை எதிர்த்துள்ளனர், என்னை மிரட்டியும் உள்ளனர். பின்புலம் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் எந்த மீடியாவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக எதிர்ப்பார்கள். அதை மறுக்கமுடியாது. ஆனால் இந்த போக்கு டிஜிட்டல் மீடியா மேல் மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது என்றால்... டிஜிட்டல் மீடியா விமர்சகர்கள் விமர்சனங்களை வியாபாரம் ஆக்குகிறார்கள். விமர்சனம் என்பது தராசு போல் நடுநிலையாக இருக்க வேண்டும். அதற்காக பழமையான ஊடகங்கள் செய்வதுதான் சரி என்றும் என்றும் நான் கூறவில்லை. அங்கேயும் தவறுகள் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் டிஜிட்டல் மீடியாவில் எல்லை தாண்டி நடப்பதால் அங்கே பிரச்சனை அதிகமாகவுக்ளது. குறிப்பாக சிலர் படத்தை எப்போதும் ஆஹா...ஓஹோ..என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். இன்னும் சிலர் எப்போதும் அது சரி இல்லை, இது சரி இல்லை என்று எப்போதும் குறைமட்டுமே கூறுகின்றனர். அதுதான் இங்கு பிரச்சனையாக உள்ளது. எப்போது நடுநிலையான விமர்சனங்கள் வருகிறதோ அப்போது மக்களும், தயாரிப்பாளர்களும் கண்டிப்பாக அதை எந்த சாமரசமும் இன்றி ஏற்றுக்கொள்வர்'' என்றார்.