1997ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'டைட்டானிக்'. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மொழிகளைக் கடந்து அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இன்று வரைக்கும் பல இளைஞர்களுக்கு இப்படம் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும். 200 மில்லியன் அமெரிக்க டாலரில் எடுக்கப்பட்ட இப்படம் மொத்தம் 2.202 பில்லியன் டாலர் வசூலித்தது.
மேலும் ஆஸ்கர் விருதுக்கு, 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, 11 விருதுகளை வாங்கி வாயடைக்க வைத்தது. கப்பல் மூழ்கினாலும் ஜாக் மற்றும் ரோசின் காதல் கதை மூழ்காத கப்பலாகவே இருந்து வருகிறது. அப்படி காதல் காவியமாகப் பார்க்கப்பட்ட இப்படம் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் டைட்டானிக் படக்குழு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதாவது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படம் தற்போது ரீ ரிலீசாக உள்ளது.
அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.02.2023) வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, இந்த முறை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு 4கே வெர்ஷனிலும் 3டியிலும் வெளியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதோடு புதிய ட்ரைலரையும் வெளியிட்டுள்ளது. இதனால் டைட்டானிக் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.