அண்மையில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நாம் எதிர்க்க போவது இரண்டு ஜாம்பவான்களாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை என்பதை மனதில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லை. ஆள் பலம், பண பலம் இருந்தும் கலைஞரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் நிலையில் ஸ்டாலின் உள்ளார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடைய கட்சிகள் உடையும். இந்த வயதில் என்னை நம்பி வர இருக்கிறீர்கள் முதலிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவது நல்லது.
என்னை வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன்” என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை செய்தியாளர்கள் முன்பு அறிவித்தார்.
குறிப்பாக தான் கட்சி ஆரம்பித்தால் இளைஞர்களுக்குதான் அதிக பதவி வழங்கப்படும், அவர்கள்தான் போட்டியிடுவாரக்ள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செயலாளர் பேசுகையில், “திமுக இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தினரை விமர்சிக்கவில்லை அதற்கு காரணம், கலைஞருக்கு ஆதரவாக இருந்த ரஜினிகாந்த், தனக்கும் ஆதரவாக இருப்பார் என ஸ்டாலின் அற்ப ஆசையில் இருக்கிறார். தமிழகத்தில் இரு கட்சிகளுக்கிடையே தான் தேர்தல் போட்டி நிலவும். அது ரஜினிகாந்த், ஸ்டாலின் என்று தான் இருக்கும்.
விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள இளைஞர்களை கவரும் விதமாகத்தான் எதிர்வரும் அரசியல் களத்தில் கட்சி தொடங்கினால், அதில் இளைஞர்களுக்கு 60 சதவிகிதம் வாய்ப்பு வழங்கப்படும் என்று ரஜினிகாந்த் பேசியதாகவும், இது விஜய் ரசிகர்களை இழுக்கும் ஒரு முயற்சியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.