மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றியை ஏ.ஆர். ரஹ்மான், உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள்.
இந்நிலையில் திருமாவளவன் எம்.பி, மதுரையில் மாமன்னன் படத்தை பார்த்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிகத் துணிச்சலாக இந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தை தயாரிப்பதற்கும் நடிப்பதற்கும் உடன்பட்டு முழுமையாக இதில் ஈடுபட்டு வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெஞ்சார்ந்து பாராட்டுகிறேன். சனாதனத்தின் அடிப்படையாக இருக்கிற பாகுபாட்டினை தனது கருப்பொருளாக எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு பக்கம் சாதி வெறியின் போக்கு இன்னொரு பக்கம் சமூக நீதி அரசியல். இரண்டுக்கும் நடக்கிற யுத்தத்தில் சாதிவெறி வீழ்த்தப்படும் சமூக நீதி வெற்றி பெறும் என்பதை இப்படத்தின் ஊடாக நிறுவியிருக்கிறார். என்றாலும் சமூக நீதி போராட்டம் கடினமானது. குருதி சிந்தும் போராட்டமாக இருப்பது என்பதை மிக தத்ரூபமாக எடுத்து விவரித்திருக்கிறார்.
‘உன் அப்பாவை நிற்க வைப்பது என் சமூகத்தின் அடையாளம். உன்னை உட்காரச் சொல்ல வைப்பது எங்களின் அரசியல்’ என்று வில்லனை வைத்து பேச வைத்திருக்கிறார். தனது தந்தையை பிறருக்கு சமமாக அமர வைக்க வேண்டும் என்ற போராட்டமாக மாரி இயக்கியிருக்கிறார். உதயநிதி சிறப்பாக நடித்திருக்கிறார். வடிவேலுவின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது. இப்படம் காலத்திற்கு பொருத்தமான ஒரு திரைப்படம். அம்பேத்கர், பெரியார், சே குவேரா போன்ற தலைவர்களை பின்னணியில் காட்டுவதும் நிறைவாக அம்பேத்கர் அரசியலை குரல் பதிவாக காட்டுவதும் போற்றுதலுக்குரியது. அரசியலில் எந்தளவிற்கு சாதீயம் தலைவிரித்து ஆடுகிறது, சமூகத்தில் நீண்ட நெடுங்காலமாக இறுகிக் கிடக்கிற இந்த போக்குகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக முக்கியமான காட்சியில் வைத்திருக்கிறார்.
சாதி இந்துக்கள் என்ற வளையத்திற்குள்ளே எல்லோரும் சிக்கிக்கொள்ளக் கூடாது. ஜனநாயக சக்திகளாகவும் எழுச்சி பெற வேண்டும் என்ற வகையில் சொந்த சாதி சமூக அடையாளங்களை உதறிவிட்டு மாமன்னனுக்கு வரவேற்பு கொடுக்கக் கூடிய வகையிலே சாதி இந்து சமூகத்தில் இருந்து வெளியே வருகிற காட்சி மிக முக்கியமான ஒரு புள்ளி. அது தான் சமூகத்தில் நிகழ வேண்டும். ஜனநாயக சக்திகள் சாதியாய் சுருங்கி முடங்கிப் போகாமல் அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்று ரத்னவேலுக்கு (ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம்) எதிராக அவர்கள் எழுச்சி பெறுகிறார்கள். அந்த காட்சியையும் முக்கியமான காட்சியாக பார்க்கிறேன். ஒட்டுமொத்தத்தில் இப்படம் சமூக நீதியே வெல்லும் என்று உணர்த்துகிறது" என்றார்.