Skip to main content

சிவகுமார் வழங்கும் 'திருக்குறள் 100'

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

'Thirukural 100' presented by Sivakumar

 

சிவகுமார் வழங்கும் திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி 'திருக்குறள் 100' தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி சிவகுமார் பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்தார். 

 

நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில் 'திருக்குறள் 100' என்ற உரையை 4 மணி நேரம் நிகழ்த்தி, அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார் சிவகுமார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர், பரிமேலழகர் முதல் கலைஞர், சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள்.  அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார். 

 

'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு'  என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழியில் இறங்கி உயிர்விடும்  துப்புரவுத் தொழிலாளியின் கதை வரை கூறி 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்.

 

பெரும் வரவேற்பைப் பெற்ற 'திருக்குறள் 100' சிறப்பு நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சியில் பொங்கல் தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகுமார் பேசியதாவது…

 

40 ஆண்டுகள் திரைப்படங்களில், நாடகங்களில், சின்னத்திரையிலும் பணியாற்றினேன். என் 64 வயதில் இனி மேக்கப் போட்டு நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். ஸ்டாலின் குணசேகரன் 18 ஆண்டுகளாக ஈரோடு புத்தக விழாவை எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் நடத்தி வருகிறார். அவர்தான் என்னை மேடைப் பேச்சுக்கு அழைத்து வந்தவர் .

 

பின்னர் இலக்கியம் பக்கம் திரும்பினேன். கம்ப ராமாயணம் மொத்தக் கதையையும் 100 பாடல்கள் வழியாக விளக்கிப் பேசிய முதல் மனிதர்  நான் தான் என இப்போது கூறுகிறார்கள். அது மிகப்பெரும் மகிழ்ச்சி. மகாபாரதத்தை 2.10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன். இவையெல்லாம் இப்போது யூடியூப் தளத்தில் கிடைக்கிறது. இப்போது திருக்குறளைப் பேசியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று முதலில் பயமுறுத்தினார்கள். 3 1/2 வருடம் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன். இப்போது இதன் உரிமை பெற்று தொலைக்காட்சியில் பொங்கல் அன்று ஒளிபரப்புகிறார்கள். எல்லோரும் பார்த்து ரசியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்