Skip to main content

நிகழ்ச்சியில் இயக்குநர் வாய்ப்பு கேட்ட ரசிகர்; ஊக்கமளித்து நானி செய்த செயல்

Published on 24/04/2025 | Edited on 24/04/2025
fans asked director chance to nani

தெலுங்கில் முன்னணி நடிகரான நானி புதிதாக நடித்துள்ள படம் ‘ஹிட் - 3’. இப்படத்தில் கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்க கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வகையில் கேரளா கொச்சியில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு ரசிகர் நானியை வைத்து படம் இயக்க விரும்புவதாக தெரிவித்தார். இதைக் கேட்ட நானி அவரிடம் கதையின் சுருக்கம் இருக்கிறதா எனக் கேட்டார். உடனே அந்த ரசிகர் இருக்கிறது என சொல்ல, அவரை மேடைக்கு வரவழைத்த நானி, அவரிடம் இருந்து கதை சுருக்கத்தின் பேப்பரை வாங்கிக் கொண்டு, “நான் போகும் வழியில் இதை படிக்கிறேன். அல்லது விமானத்தில் ஏறியதும், இதற்காக சிறிது நேரம் ஒதுக்குகிறேன். உங்கள் யூட்யூப் வீடியோவையும் பார்க்கிறேன். இது என் வேலை. எனது பொறுப்பும் கூட. உங்களுக்காக நான் செய்யவில்லை. எனக்காக செய்கிறேன்” என்றார். 

நானியின் பேச்சை கேட்டு உற்சாகமடைந்த அந்த ரசிகர் நானியிடம் உங்களை கட்டிபிடிக்க வேண்டும் என கேட்க நானியும் கட்டிபிடித்து மகிழ்ந்தார். அப்போது அந்த ரசிகரின் இதய துடிப்பு வேகமாக இருப்பதை கவனித்த நானி, “உங்கள் இதயம் வேகமாக துடிப்பதை என்னால் உணர முடிகிறது. சினிமா மீது நீங்கள் அன்பு வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. நீங்கள் இப்படியே தொடர்ந்து முயற்சித்தால் நான் இல்லையென்றாலும் யாராவது உங்கள் ஸ்கிரிப்டை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது நீங்கள் அடைய விரும்பும் இடத்தை அடைவீர்கள்” எனத் தெரிவித்தார். நானியின் இந்த செயல் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்