Skip to main content

ஏன் நாங்கெல்லாம் சிம்ரன் கூட நடிக்கக்கூடாதா? - சசிகுமார்

Published on 24/04/2025 | Edited on 24/04/2025
sasikumar speech at tourist family event

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார், “படக்குழுவினர் மேடையில் இவ்வளவு விசயங்களை பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இது போன்ற மேடையில் தான் தங்களது நன்றியை தெரிவிக்க இயலும். படம் வெளியான பிறகும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை மட்டும் அறிமுக இயக்குநருக்கு அறிவுரையாக சொல்கிறேன். நன்றி தெரிவிப்பது நல்ல விசயம். இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவிற்காகத்தான் சற்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினரான நாங்கள் பேசுவதை விட.. படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த 'குட்நைட்' 'லவ்வர்' என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்த படத்தில் படத்திற்குள் வந்தேன்.  இது எனக்கு தான் பெரிய விசயம். கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்சன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.

எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். நிறைய பேர் நீங்களும் சிம்ரனும் நடிக்கிறீர்களா என்று கேட்டார்கள். ஏன் நாங்கெல்லாம் சிம்ரன் கூட நடிக்கக்கூடாதா. அவர் ஏன் நடித்தார் என படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். சிம்ரனுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ.  அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்த கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும் போது காமெடியாக இருக்கும். பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும். உங்களை - ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும் , விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.  வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து- மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும். உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது? என்று கேட்டபோது அவர் 'தெனாலி' திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது 'தெனாலி', 'மொழி' போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன். இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார்.   இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார். இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் அன்பை போதிக்கிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்