இந்தியில் வெற்றி பெற்ற ராஷ்மி ராக்கெட் படத்தின் எழுத்தாளர் நந்தா பெரியசாமி சமுத்திரக்கனியை வைத்து ‘திரு.மாணிக்கம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில், பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இப்படத்தில் பணியாற்றி தம்பி ராமையா, இயக்குநர் நந்தா பெரியசாமி ஒளிப்பதிவாளர் சுகுமார், ஆகியோரை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர்கள் இப்படத்தின் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டனர். மூவரிடமும் பாரதிராஜா உடன் பணியாற்றிய அனுபவத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு சுகுமார், “ இந்த படத்தில் 100 சதவிகிதம் பாரதிராஜவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும்” என்றார்.
இந்த கேள்விக்கு தம்பி ராமையா பதிலளித்தபோது, “இந்த படத்தை பாரதிராஜா பார்த்துவிட்டு ‘அடுத்த படம் எப்ப டா ஆரம்பிக்குற’ என இயக்குநரிடம் கேட்டார். நந்தா பெரியசாமி, சுகுமார் இருவரும் மாபெரும் லெஜண்ட்டான பாரதிராஜாவை படம் பிடித்துள்ளனர். அதனால் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று கூறினார். தொடர்ந்து இயக்குநர் நந்தா பெரியசாமி பேசுகையில், “படத்தை பார்த்துவிட்டு நானும் ஒளிப்பதிவாளரும் பாரதிராஜாவை சந்தித்து மரியாதை செலுத்தினோம். அந்தளவிற்கு நன்றாக நடித்திருந்தார்” என்றார்.