தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்பு பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் எனும் பாப் பாடகரை திருமணம் செய்துகொண்டார். நடிப்பது மட்டுமில்லாமல் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதோடு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் உக்ரைன் ரஷியா நாட்டு போர் தொடர்பாக 20 லட்சம் உக்ரைன் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியதாக வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் அந்த குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கி உதவ முன்வந்த யுனிசெஃப் நிறுவனத்தின் இணைப்பையும் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, போலந்து நாட்டில் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள உக்ரைன் நாட்டு குழந்தைகளை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "பெரும்பாலும் விவாதிக்கப்படாத ஒரு அம்சம், ஆனால் நெருக்கடியான நேரத்தில் அகதிகள் மீதான உளவியல் தாக்கம் மிகவும் பரவலாக உள்ளது . இந்தப் போரில் தாங்கள் கண்ட பயங்கரங்களைச் சமாளிக்க முயற்சிக்கும் எத்தனையோ பெண்களையும் குழந்தைகளையும் நான் சந்தித்தேன். குழந்தைகளை மீண்டும் இயல்பிற்கு கொண்டு வர விளையாட்டு மிக முக்கியம். விளையாட்டின் மூலம், குழந்தைகள் பாதுகாப்பையும் ஓய்வையும் பெறமுடியும்.
இந்த பணியில் நான் சந்தித்த குழந்தைகள் கலையுடன் பணியாற்ற விரும்புகிறார்கள். யுனிசெஃப் உடன் நான் பார்வையிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உக்ரேனிய குழந்தைகள், அவர்கள் கைகளால் செய்த பொம்மைகளை எனக்கு பரிசளித்தார்கள். இந்தப் போர், நாட்டில் உள்ள 5.7 மில்லியன் பள்ளி குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உண்மையில் இப்போது அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது." என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.