
கடந்த 1ஆம் தேதி முதல் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியுள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான தியேட்டர்கள் காலியாக உள்ளன. எனவே, தொழிலாளர்கள் சம்பளம், தியேட்டர் பராமரிப்பு ஆகியவற்றுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை உள்ளது. இதற்கிடையே வருகிற 8-ந்தேதி முதல் தெலுங்கு படங்களும் தமிழக தியேட்டர்களில் வெளியாகாது. ஓடும் தெலுங்கு படங்களும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தற்சமயம் சரிக்கட்டும் வகையில் தமிழக தியேட்டர்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு சில தியேட்டர்கள் சார்பில் ஐ.பி.எல். போட்டியை திரையிட அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்..."இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல், மே மாதம் 27-ந்தேதி வரை நடக்கிறது. இதை தியேட்டரில் திரையிட அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். புதிய படங்கள் வராததால் அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூல் இல்லை. எனவே, அரசுக்கும், தியேட்டர்களுக்கும் வருமானம் கிடைக்கும் வகையில் இந்த கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" கூறப்பட்டுள்ளது.