Skip to main content

தென் இந்திய திரைப்பட உலகில் ஸ்ட்ரைக் ! புதிய படங்கள் இன்று முதல் ரிலீசாகாது

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
vs


தென் இந்தியா முழுவழுதும் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பட உலகில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கின்றன. இந்நிலையில் இந்த கட்டணங்கள் அதிகம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும்  அவர்கள் வலியுறுத்தி, தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி இப்பிரச்சினைக்கான இறுதி முடிவு எடுப்பது குறித்து ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் டிஜிட்டல் சேவை கட்டண விகிதங்களுக்கு எதிராக புதிய படங்களை வெளியிடுவதை இன்று முதல் நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வற்புறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி பட அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் இம்மாதம் திரைக்கு வர இருந்த இரும்புத்திரை, கரு, பக்கா, எனை நோக்கி பாயும் தோட்டா, உத்தரவு மகாராஜா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்கள் தள்ளிப்போகின்றன. 

சார்ந்த செய்திகள்