பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் தமிழ் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. மேலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு திருமாவளவன் எம்.பி., சீமான், சேரன் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக படக்குழுவினருக்கு உணவு விருந்து வைத்தார் விக்ரம். இப்படத்தை மகாராஷ்டிராவில் முதல் முறையாக 16 கிராமத்தை சேர்ந்த 200 பழங்குடியின பெண்கள் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில் அதை எதிர்நோக்கி காத்திருந்தனர் ரசிகர்கள். இந்த சூழலில் இந்த மாத தொடக்கத்தில் இப்படத்தை ஓ.டி.டி.-யில் வெளியிடத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அவர், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைண மதம் குறித்து நகைச்சுவையான முறையிலும் காட்சிகள் இருப்பதால் ஓ.டி.டி.-யில் வெளியான பிறகு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்கலான் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தணிக்கை சான்று பெற்று திரையரங்கில் வெளியான பிறகு ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.
சமீபத்தில் படத்தின் ஓ.டி.டி. அப்டேட் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளார்கள். தங்கலான் பெரிய படம் என்பதால் பண்டிகை சமயங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்” என்றார். மேலும் தீபாவளிக்கு படத்தை வெளியிடும் ப்ளானில் நெட்ஃபிளிக்ஸ் இருப்பதாக கூறியிருந்தார். அதனால் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.