முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் பிசியாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் சமுத்திரக்கனி யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர் நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள படம் 'ஆண் தேவதை'. ரம்யா பாண்டியன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைப்பில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை தாமிரா இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து அவர் பேசும்போது... "படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாக இந்த 'ஆண் தேவதை'யை பார்க்கிறேன். இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றியும், குறிப்பாக உலகமயமாக்கல் பற்றியும், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசுகிறது.
ஒரு சினிமாவானது இரண்டு வழிகளில் வெற்றி அடைகிறது. ஒன்று வெற்றிகரமான ஃபார்முலாவில் பயணித்து எளிதாக வெற்றி அடைகிறது. இன்னொன்று வழக்கத்துக்கு மாறான சினிமாவாக உருவாகி, முன்னோடியாக மாறுகிறது. ஆண் தேவதை வெற்றி பெறுவதோடு, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையும் என நம்புகிறேன். சமுத்திரக்கனியின் நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் ஒரு மேதை. மேலும் அவரது கவர்ந்திழுக்கும் திரை ஆளுமையால் நம் கவனத்தை அவர் பக்கம் திருப்பி விடுவார். ரம்யா பாண்டியன் அவர் கேரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டுதலுக்குரிய முயற்சி. படம் வெளியான பிறகு மக்களிடம் இருந்து அதற்காக பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.