விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் 'ரஞ்சிதமே' பாடலை தொடர்ந்து சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு யூ-ட்யூபில் 8.5 மில்லியன் பார்வைகளைத் தாண்டி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'தளபதி 67' படத்தின் பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. இந்தப் பூஜையில் விஜய், லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் உள்ளே செல்ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஒளிப்பதிவாளராக விஜய்யின் 'நண்பன்', 'பீஸ்ட்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தைப் போல் 'தளபதி 67' படத்தின் அறிவிப்பையும் ஒரு டீசரின் மூலம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த அறிவிப்புக்கான டீசரின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக விஜய் படங்களின் பூஜை நடைபெறும் போது, அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டில் இருக்கும். ஆனால், இம்முறை செல்ஃபோன்கள் அனுமதிக்கப்படாததால் எந்தப் புகைப்படமும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.