
நடிகை டாப்ஸி ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘நாம் சபானா’, ‘ஜூத்வா 2’ வெற்றிபெற்று இவருக்கு நடிப்பில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் அவருக்கு நிறைய பேர் காதல் கடிதங்கள் அனுப்பி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். இது குறித்து மனம் திறந்த டாப்சி..."எனக்கு ரசிகர்களிடம் இருந்து காதல் கடிதங்கள் குவிகின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் அவர்களின் அன்பை பார்க்க முடிகிறது. ஒரு ரசிகரின் காதல் கடிதம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. அவர் எழுதியிருந்த ஒவ்வொரு வரியும் கவர்ந்தது. அந்த கடிதத்தில் அவர், “நான் மது அருந்த மாட்டேன். மாமிசத்தை தொட மாட்டேன். எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவன். உன்மேல் எனக்கு இருக்கும் அன்பை நிரூபிக்க உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறேன். என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே. என் மனதில் முழுமையாக நீதான் இருக்கிறாய்” என்று எழுதி இருந்தார். எனக்கு வந்த காதல் கடிதங்களில் இதுதான் சிறந்தது. எனவே அந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன்" என்றார்.