கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை கதையை வைத்து 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி' என்ற பெயரில் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
'சச்சின்: அ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் சச்சின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. ஆவணப்படமாக இருந்தாலும் திரையரங்குகளில் சச்சின் என்ற ஒரு மாஸ்டர் பிளாஸ்ட்டருக்காக ரசிகர்கள் குவிந்தனர்.
தற்போது 1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் கபில் தேவ் தலைமையில் எப்படி இந்தியா உலகக்கோப்பையை முதன் முறையாக தட்டிச் சென்றது என்பது குறித்து படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா நடிக்கிறார்.
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்க இருக்கின்றனர். ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே ரசித்து பார்த்து வந்தவர்களை கடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இவர் தலைமையிலான அணியிலான ஆட்டத்தின் மூலம் பார்க்க வைத்தவர் மித்தாலி ராஜ் என்று சொல்லலாம். ஆனால், இறுதிப்போட்டி வரை தனது தலைமையிலான அணியை கொண்டு வந்து தோல்வியை தழுவினார்.
‘சபாஷ் மித்து’ என்று உருவாகும் இந்த படத்தில் டாப்ஸி மித்தாலி ராஜாக நடிக்க இருக்கிறார். மித்தாலி ராஜின் பிறந்தநாளான இன்று டாப்ஸி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இச்செய்தியை டாப்ஸி தனது ட்விட்டரில், மித்தாலி ராஜுக்கு கேக் கட் செய்வதுபோன்ற புகைப்படங்களுடன் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.