53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழா வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், திரைப் பிரபலங்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியத் திரைப்பட ஆளுமை, தங்கமயில், வெள்ளிமயில், சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை எனப் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருதை பிரபல நடிகர் சிரஞ்சீவி பெறுகிறார். மேலும் சூர்யாவின் 'ஜெய் பீம்' படம் சிறப்பு திரையிடலிலும், 'கிடா' எனும் படம் ஃபிலிம் ஃபோக்கஸ் பிரிவிலும் இடம் பெற்றுள்ளது.
இதில் முக்கியத்துவம் வாய்ந்த விருதாக தங்கமயில் விருது பார்க்கப்படுகிறது. இதில் தமிழ் படமான 'குரங்கு பெடல்' போட்டியிடுகிறது. இப்படம் விருதை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.