இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பாலிவுட் சினிமாவான இந்தி மொழிப்படங்கள் தான் முதலில் உலகெங்கும் பேசப்பட்டு வந்தது. அதை பான் இந்தியத் திரைப்படங்களாக வெளிவந்த புஷ்பா, ஆர் ஆர் ஆர், கேஜிஎப் – 2 ஆகிய படங்கள் உடைத்தெறிந்திருக்கிறது.
இந்த படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் வசூல் சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக 1000 கோடியைத் தாண்டிய திரைப்படங்களின் பட்டியலில் இணைந்திருக்கின்றன கேஜிஎப்-2, ஆர்.ஆர்.ஆர்.
தமிழில் வெளிவந்த பீஸ்ட், வலிமை ஆகியவை பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியத் திரைப்படங்களாக வெளியானாலும் வசூல் ரீதியாக பார்க்கும் போது அவை பான் இந்தியா படங்களாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று சொல்ல வேண்டும். தமிழகத்தில் இப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் இந்திய அளவில் பெரிய அளவிலான வசூல் சாதனையைத் தொடமுடியாமல் போனது என்கிற வருத்தம் தமிழ் ரசிகர்களிடத்தில் இருக்கிறது
தொடர்ச்சியாக தமிழ்த்திரைப்படங்களை விட மற்ற மொழித்திரைப்படங்கள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிற வருத்தத்தை படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாடல் வெளியீட்டு விழா மேடைகளில் நேரடியாகவே பலமுறை தெரிவித்தனர்.
திறமைசாலியான தமிழ்ப்படைப்பாளிகளுக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து மற்ற மொழி பான் இந்திய படைப்பாளிகள் முன் காலரைத் தூக்கி கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருந்ததை சினிமாக்காரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவருமே அறிந்திருந்தனர்.
இப்படியான சூழலில் தான், நேற்று வெளியான கமல்ஹாசனின் விக்ரம் தமிழ் ரசிகர்களையும் காலரைத் தூக்க வைத்துள்ளது. முதல் காட்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களைத் தாண்டி பொதுவான ரசிகர்களாலும் படம் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் வந்தவண்ணம் உள்ளது இப்படத்திற்கு. கிட்டத்தட்ட சூப்பர் டூப்பர் ஹிட் தான் என்பதால் மற்ற மொழி பான் இந்தியப் படங்களை ஓவர் டேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்…