Skip to main content

பாலியல் புகார்; நழுவும் முன்னணி நடிகர்கள்

Published on 02/09/2024 | Edited on 03/09/2024
tamil actors about kerala film industry hema committee report issue

மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஸ்ரீலேகா மித்ரா, ரேவதி சம்பத், மினுமுனீர், சர்மிளா மற்றும் இன்னும் ஒரு நடிகை இது வரை புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக், நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முகேஷ் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார்கள் தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் முழு வடிவத்தையும் வழங்கக் கோரி கேரள அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.
 
இதற்கிடையே பாலியல் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்ததால் மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு நிர்வாகிகள் தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். மேலும் அம்மா அமைப்பை கலைத்தனர். இந்த ஹேமா அறிக்கை விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு என ப்ரித்விராஜ், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல மலையாள திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.  

தமிழ் திரை பிரபலங்கள் பொறுத்தவரை நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால், “தமிழில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழலில் இருக்கிறது. ஆனால் காலம் காலமாக அந்த குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழிலும் ஒரு 10 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்கம் சார்பில் அமைக்க இருக்கிறோம்” என்றார். நடிகை ராதிகா, பாலியல் துன்புறுத்தல் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நடக்கிறது என்றும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றுவதை படம்பிடித்து வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும், பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில் தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜீவா, அர்ஜுன் ஆகியோர் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளனர். ரஜினி, “அது குறித்து எனக்கு தெரியாது” என்றார். ஜீவா, தேனியில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “பல திரைத்துறைகளில் பல விஷயங்கள் நடக்கிறது. எங்களுடைய வேலை நல்ல சூழ்நிலையை உருவாக்குவது. தமிழ் திரைத்துறையில் இது போன்ற பிரச்சனை இல்லை” என்றார். அப்போது மீண்டும்  ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான கேள்விகளை செய்தியாளர் ஒருவர் கேட்க, அவரிடம் கோபப்பட்டு, “நல்ல விஷயத்துக்கு வந்திருக்கிறோம். அறிவு இருக்கா...” என்றார். இது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

இதையடுத்து அர்ஜூன், அவர் கதையில் உருவாகியுள்ள மார்டின் பட செய்தியாளர்கள் சந்திப்பில், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு, “உலகத்தில் எல்லா துறைகளிலும் இது போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென்றால் நீதிமன்றம் மூலமாகத் தான் கிடைக்க வேண்டும். நிறைய பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அதே சமயம் தவறாக குற்றம் சுமத்தும் பெண்களும் இருக்கிறார்கள்” என்றார். கார்த்தியும் அவர் நடித்துள்ள மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில், இது தொடர்பான கேள்விக்கு, “இது அதற்கான மேடை இல்லை” என்றார்.

சார்ந்த செய்திகள்