சினிமா வாய்ப்புகளுக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை குறித்து பல நடிகைகள் தற்போது தைரியமாக வாய் திறந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹிந்தி நடிகை ஸ்வரா பாஸ்கரும் இணைந்துள்ளார்.
சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து அவர் பேசும்போது.... "பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக நான் கடுமையாக எதிர்த்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடுகிறேன்.இதனால் என்மீது பலர் ஆத்திரத்தில் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மோசமாக திட்டுகிறார்கள். உன்னை கற்பழிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் மிரட்டுகிறார்கள். மோசமான வலைத்தள கருத்து பதிவுகளை கட்டுப்படுத்த அமைப்புகள் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் குடும்பம், பெயர், பிறந்ததேதி சாதி, மதம் போன்ற சொந்த விவரங்களையும் திரட்டி பதிவு செய்து மிரட்டுகிறார்கள். இதனால் சுய கவுரவம் பாதிக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவது இல்லை. புகார் அளிக்க சென்றால் உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட்டு ஒழிக்கவேண்டும்" என்றார்.