இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல கதை, கருத்துள்ள படம் என்ற பெயரை பெற்றுள்ளது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. 'நான் மகான் அல்ல', 'ஆதலால் காதல் செய்வீர்', 'ராஜபாட்டை' என சுசீந்திரன் - யுவன் கூட்டணியின் பாடல்கள் எப்பவும் ஹிட்தான். சில படங்கள் இமானுடன் பணியாற்றிய சுசீந்திரன், மீண்டும் யுவனுடன் பணியாற்றியது குறித்து நம்மிடம் பகிர்ந்தார். ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு 'பியார் பிரேமா காதல்' படத்தில் 'யுவன் இஸ் பேக்' என்கிறார்களே என்று அவரிடம் கேட்டோம்.
"நான் அதுபோல் பொதுவாக பார்க்கவில்லை. யுவன் எங்கோ சென்றுவிட்டு இப்போது 'யுவன் இஸ் பேக்' என்று நான் நினைக்கவில்லை. எப்போதுமே ஒரு படம் சரியாக இருந்து அதில் யுவன் இசை மட்டும்தான் குறை, அதனால் படம் சரியில்லை என்று நம்மால் சொல்லவே முடியாது. எந்தப் படமாக இருந்தாலும், கதை நன்றாக இருந்தால் யுவனும் தன் பங்கை சரியாகச் செய்வார். அப்படி அமையாதபோது யுவனால் எதுவும் பண்ணமுடியாது. அதனால், யுவனுக்கு அமைந்த படங்கள்தான் அவரது வேலையை தீர்மானித்தனவே தவிர அவர் குறையாகச் செய்யவில்லை.
இந்தப் படத்தில் பள்ளிப்பருவம் சார்ந்து 'நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி, காதலும் இல்லை கர்மமும் இல்லை...' என்று ஒரு பாடல் உள்ளது. இது கண்டிப்பாக பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று நினைக்கிறன். ஜீவா படத்தில் 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' பாடல் எடுக்கும்போது என் உணர்வுகள் எப்படி இருந்ததோ அதுபோல் இருந்தது. அதற்கடுத்து 'விளையாடு மகனே விளையாடு' கிளைமேக்ஸ் பாடல். இதில் என் மகன் நடித்திருப்பதால் எனக்கு இன்னும் ஸ்பெஷலான பாடல். அதுமட்டுமின்றி 'ஆதலால் காதல் செய்வீர்' படத்திற்குப்பின் இந்தப் படம்தான் கிளைமேக்ஸில் பாடலோடு முடியுமாறு வைத்திருக்கிறேன். அது ஒரு புதுஅனுபவம். இந்த இரண்டு பாடல்களிலும் அதிகமாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார் யுவன். 200 சதவிகிதம் யுவன் பிஜிஎம் சிறப்பு என்று எழுதுவார்கள்.