செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவனும், யுவனும் இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிய, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஃபிப்ரவரி மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தண்டல்காரன் என்றொரு பாடலும் வெளியானது.இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி எப்போது வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்தியது படக்குழு. நேற்று இரவு 7:30 மணிக்கு யூ-ட்யூபில் வெளியான ட்ரைலர் வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் தவிர மற்ற படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது சூர்யா பேசுகையில், “அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம் என்று சொல்வார்கள். அதே மாதிரி யுத்தம் ரத்தம் சிந்துற அரசியல் என்று சொல்வார்கள். செல்வராகவனின் கதையை நான் அப்படித்தான் பார்க்கிறேன். இது வெறும் அரசியல் சார்ந்த த்ரில்லர் படம் மட்டும் அல்ல. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இது அடுத்த லெவல் என்று சொல்வேன்.
சின்ன அரசியலோடு அவருடைய கருத்து, ரசனை மாதிரி நிறைய விஷயங்கள் 'என்.ஜி.கே' படத்தில் இருந்தது. எடுத்துக் கொண்ட கதை அந்த மாதிரியானது. அதற்கான நேரத்தையும் அதுவாகவே எடுத்துக் கொண்டது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும், புது படத்துக்கு போகிறமாதிரி இருந்தது. ஏனென்றால், முந்தைய நாள் காட்சிகளை வைத்து அடுத்த நாள் கடந்துவிட முடியாது. இதை தினமும் நிரூபித்துக் கொண்டே இருந்தார்” என்று என்.ஜி.கே கதை பற்றியும் செல்வராகவன் பற்றியும் சூர்யா கூறினார்.