சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு, அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக நடைபெறும் ‘EMPOW HER - 2024’ சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இதில் சூர்யா கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார்.
அவர் பேசியதாவது, “அகரம் அமைப்போட கூட்டு முயற்சியில் படிப்பு சார்ந்து முதல் முறைய STEM பத்தின ஒரு கருத்தரங்கம் நடப்பது ரொம்ப முக்கியமானதாக பார்க்கிறேன். அகரம் ஆரம்பிச்சு 15 வருஷத்துல கிட்டத்தட்ட 6000 மாணவ, மாணவிகள் படிச்சு முடிச்சிருக்காங்க. படிச்சிட்டும் இருக்காங்க. அதுல 70 சதவீதம் பேர், பெண்களாகிய என் தங்கைகள். அகரம் அமைப்பில் வருஷம், வருஷம் 70 சதவீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்பதை ஒரு விதிகளாக பின்பற்றி வருகிறோம். படிச்சு முடிச்சப் பிறகு அவர்களுக்கு என்ன பண்ணலாம் என குழுவா யோசித்த போது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளட்டக்கிய (STEM) படிப்பிலும் துறையிலும் பெண்களுடைய பங்களிப்பு கிட்டதட்ட 30 சதவீதம் தான் இருக்கு என தெரியவந்தது. STEM என்பது வெறும் படிப்பு மட்டும் கிடையாது. அதில் கிரியேட்டிவிட்டி, பிரச்சனைகள் தீர்ப்பது, புதுமை என எல்லாமே அடங்கியிருக்கு. இது அனைத்துமே பெண்களுக்கு இயல்பாகவே வரக்கூடியவை. அப்புறம் ஏன் வரமாட்டிங்குறாங்க என பார்த்தால் அவர்களுக்கு ஒரு முன் மாதிரி யாருமே இல்லைன்னு காரணம் வைக்குறாங்க. ஆனால் அது இல்லை.
பெண்கள் நமக்கு சிசிடிவி, டயாப்பர், பீர், வீடியோ கால் என ஏகப்பட்ட விஷயங்களை கண்டுபுடிச்சி கொடுத்துருக்காங்க. இந்தியாவுடைய அக்னி ஏவுகணையில் டெஸ்ஸி தாமஸ், இஸ்ரோவில் மங்கல்யான் உள்பட 14 மிஷின்களை வெற்றிகரமாக எடுத்ததில் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. பெண்களின் பங்களிப்பு ஏகப்பட்டது இருக்கு. வழக்கம் போல எல்லா இடத்திலும் கவனிக்கப்படுகிற, பாராட்டப்படுகிற, பேசப்படுகிற நபர்களாக ஆண்கள் மட்டும் தான் இருந்திருக்காங்க. என்னை சுற்றி உள்ள பெண்கள் ரொம்ப, ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாக இருந்திருக்கிறார்கள். அகரம் அமைப்பை நடத்துவது பெரும்பாலானோர் பெண்கள் தான். அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இதை நான் முழுமையாக நம்புறேன். பள்ளியில், கல்லூரிகளில் அதிகம் தேர்ச்சி பெறுவது பெண்கள். ஆனால் அதுக்கப்புறம் அவர்கள் என்னவாகிறார்கள் என்ற கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக இருக்குது.
நம்ம சமுதாயம் அவர்கள் மீது பல விஷயங்கள் கொடுக்குது. தொடர்ந்து வேலை செய்ய முடியாது, குழந்தை பிறந்துவிடும், நம்பமுடியாது என பல தடைகள் இருக்கு. அதை தகர்த்திட்டு வரோம். உடல் வலிமையை வைச்சி தான் ஜெயிக்க முடியும்-னு நினைச்சிகிட்டு இருக்குற ஸ்போர்ட்ஸுலையும் இந்தியாவை எங்கேயே கொண்டு போறது பெண்கள் மட்டும் தான். அது எல்லாத் துறைகளிலும் ஆகட்டும். படிச்சால் மட்டுமே போதும். பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை ஒரு சர்வே சொல்லுது. ஆண் பொறியாளரையும், பெண் பொறியாளரையும் ஒப்பிட்டு பார்த்தபோது மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது பெண்கள் தான் என ஒரு சர்வே சொல்லுது. ஆழ் மனதில் நாம் என்ன ஆக வேண்டும் என ஏங்கி தவிக்கிறோமோ அதுவாக கண்டிப்பாக ஆக முடியும். ஒரு ஆண் உழைப்பதை விட 50 சதவீதம் அதிகம் உழைத்தால் தான், பெண்களுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்குது. ஆனால் ஒரு பெண்ணால், 5 ஆண் மகன் பண்ணக்கூடிய வேலையை நான் திரும்பத் திரும்ப பார்த்திருக்கேன். அவர்களை நாம் பாரட்டுவோம். அவர்கள் மேலே உயர்வதற்கு எல்லாருமே சேர்ந்து உழைப்போம்” என்றார்.