கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (22/07/2022) டெல்லியில் இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டன. இதில் 'சூரரைப் போற்று' படம் ஐந்து விருதுகளும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மூன்று விருதுகளும், 'மண்டேலா' படம் இரண்டு விருதுகளும் வென்றுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் பத்து தேசிய விருதுகள் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கலைஞர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற சூர்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது.
’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.. என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்..நன்றியும்.." எனக் குறிப்பிட்டு தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனமார்ந்த நன்றி!
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Y— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022