
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளா - கோவை பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ரஜினி நம் நாட்டு இளைஞர்களுக்கு நாட்டின் பெருமை தெரிவதில்லை என கூறியுள்ளார். சென்னையில் லதா ரஜினிகாந்த் மற்றும் இன்னும் பிற நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அவர் பேசியதாவது, “இந்த செல்போன் யுகத்தில் இளைஞர்கள், சில பெரியோர்கள் நம் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். அவர்கள் நம் நாட்டின் , அருமை பெருமைகளைப் பற்றி அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
மேற்கத்தியர்கள் அவர்களுடைய சம்பிரதாயம், கலாச்சாரத்தில் சந்தோஷம், நிம்மதி கிடைக்கவில்லை என்பதற்காக இந்தியாவுக்கு திரும்புகின்றனர். இங்கு தான் நிம்மதியான சந்தோஷம் கிடைக்கும் என சொல்லி தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கை என பழகிக்கொண்டனர். இந்த சூழலில் லதா ரஜினிகாந்த் பாரத நாட்டின் உன்னதமான கலாச்சாரத்தை ஏழை மக்கள் வரை சென்றடைய மற்றும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கிறார். அவரின் முயற்சிகள் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்றார்.