Skip to main content

“அம்மா கடன் கொடுக்க சிரமப்பட்டார்” - ஆரம்ப கால அனுபவத்தை பகிர்ந்த சூர்யா

Published on 26/10/2024 | Edited on 26/10/2024
suriya about his personal life and his mother

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் ‘ஃபயர் சாங்...’, ‘யோலோ’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26ஆம் சென்னையில் நடக்கவுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளது படக்குழு. 

அந்த வகையில் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சினிமாவுக்கு வந்த காரணத்தை சூர்யா பகிர்ந்தார். அவர் பேசுகையில், “நடிக்க வருவதற்கு முன் பனியன் நிறுவனத்தில் பனியாற்றினேன். முதல் 15 நாளில் பயிற்சியாளராக வெறும் ரூ.750 மட்டுமே பெற்றேன். மாதம் ரூ.1200 சம்பளம். அவர்களுக்கு நான் நடிகரின் மகன் எனத் தெரியாது. கிட்டதட்ட மூன்று வருடம் அங்கு வேலை பார்த்தேன். இறுதியில் ரூ.8000 வரை என்னுடைய சம்பளம் உயர்ந்தது. 

என்னுடைய அம்மா ஒருவரிடம் ரூ.25,000 கடன் வாங்கியிருந்ததாக சொன்னார். மேலும் இது அப்பாவுக்கு தெரியாது என்றும் கூறினார். நான் பேங்க் பேலன்ஸ் பற்றி கேட்டேன். அதிலும் பெரிதாக இல்லை என்றார். அப்போது அப்பாவும் அதிக படங்களில் நடிக்கவில்லை. அதனால் அம்மா கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டார். அதை பார்த்த போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என தோன்றியது. அப்பாவும் சம்பளம் வரும் வரை காத்திருப்பார். சுமார் 10 மாதங்களுக்கு மேலாக அவரும் வேலை இல்லாமல் இருந்தார். ஒரு நடிகரின் மகனாக எனக்கு பல வாய்ப்புகள் வந்தது. மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகள் என்னுடைய வாழ்க்கையை அனைத்தையும் மாற்றியது. அம்மாவின் கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சினிமாவுக்கு வந்தேன்” என்றார்.  

சார்ந்த செய்திகள்