இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் (10.09.2023) சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான ஒரு இசை நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தங்களது டிக்கெட் நகலை பகிரவும் எனவும் குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சீனுராமசாமி உள்ளிட்ட பலரை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் தள பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த பதிவில், "ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகள் கேள்வி கேட்கப்பட வேண்டியவைதான். எப்போதும் தான் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளில் மிகக் கவனமாக இருப்பவர். இந்த முறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நம்பி விட்டதில் ஏகப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றிற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏ.ஆர். ரஹ்மானும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இருந்தும் சிலர் இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு வன்மத்தைக் கக்கத் தொடங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆஸ்கார் விருது விழா மேடையில் தமிழில் பேசி பெருமைப்படுத்திய மாபெரும் கலைஞனை இவ்வொரு நிகழ்வை வைத்து அசிங்கப்படுத்துவது மிக மிகத் தவறான செயல். இத்தனை வருட சாதனைகளை ஒருங்கிணைப்பாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் இழந்துவிட்டதாகப் பேசுவது சரியானதல்ல.
நிகழ்விற்குப் பொறுப்பேற்று சீர்செய்யும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளபோது மலிவான அரசியல் செய்யும் சிலரின் சந்தர்ப்பவாத பேச்சுக்கு நாமும் ஒத்து ஊதுவது கேவலமான நாகரீகமற்ற செயல். அவரது சாதனைகளைக் கூட விட்டுவிடுங்கள்... மனிதாபிமான செயல்களை எடுத்துக்கொண்டால் அவதூறு பேசும் நாக்குகள் சற்று கூசவே செய்யும். 2016 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி வழங்கினார். 2018ல் கேரள மக்கள் பாதிக்கப்பட்ட போது இசை நிகழ்ச்சி நடத்தி நிதி உதவி வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் நிறைய குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.
லைட் மேன் யூனியனுக்கு இசை நிகழ்ச்சி நடத்தித் தந்துள்ளார். ஒற்றை நிகழ்வால் சர்வதேச புகழ் கொண்ட ஒரு நாயகனை ஸ்கேமர் என அழைப்பது சரியான செயலா என சிந்தியுங்கள். நிகழ்ந்த தவறுகளை சரிசெய்ய நேரம் கொடுங்கள். அவராகவே முன்வந்து சரிசெய்யக் கூடியவர்தான். நம்மில் ஒருவரை நாம் தாங்கிப் பிடிக்க வேண்டிய நேரம் இது. வன்மம் பிடித்தவர்களின் நாக்குகளுக்கு நாமும் இரையாக வேண்டாம். மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை. அதேபோல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று மக்களின் பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சரத்குமார், நான் ரஹ்மானை ஆதரிக்கிறேன் என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "வரிசையைப் பின்பற்றுவது மற்றும் போக்குவரத்து விதிகள் என்ற தங்கள் சொந்த ஒழுக்கத்தைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. குற்றம் நடந்த உடனேயே குற்றவாளிகளைத் தண்டிக்க போதிய நடவடிக்கைகள் எங்களிடம் இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ஆதாரம் கிடைத்தவுடன் தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் டிக்கெட் வழங்கும்போது உண்மையான ரசிகர் யார், மாறுவேடத்தில் இருக்கும் விலங்கு யார் என்று எங்களுக்குத் தெரியாது. இதுபோன்ற கொடுமைகளை பொது இடங்களில் பார்க்க நேரிடுவது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் பார்வையில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் முதல் குழப்பத்தை உருவாக்கிய ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வேண்டும். சாலை விதிகளை மீறும் ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வேண்டும். பல நாடுகளில் சில மில்லியன் மக்கள் கூட்ட நெரிசலோ குழப்பமோ இல்லாமல் கலந்து கொள்கிறார்கள். காத்திருக்கும் அளவுக்கு பொறுமையாக இருக்கும்போது இந்தியாவிலும் இது சாத்தியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.